IJK
பெரம்பலூரில் விவசாயிகள் மாநாடு: ஐ.ஜே.கே
இந்திய ஜனநாயக கட்சி நடத்தும் விவசாயிகள் மாநாடு பெரம்பலூர் ரோவர் விவசாயக் கல்லூரி அருகே வருகிற 26 ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மே 29ந் தேதி திருச்சியில் 7 லட்சம் பேர் திரண்ட மாநாட்டில் உதயமானது இந்திய ஜனநாயக கட்சி. அனைவருக்கும் அரசியலில் வாய்ப்பு, இளைஞர்களுக்கு உரிய பங்கு, உயர்தர கல்வி, மேம்பட்ட சுகாதாரம் விவசாயத்தில் விஞ்ஞானம், ஆகியவற்றை நிலைநாட்ட இந்திய ஜனநாயக கட்சி இளைஞர்களின் எதிர்காலத் திற்காக உருவாக்கப்பட்டது என கூறியவர் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர். பல்வேறு அரசு திட்டங்களில் உள்ள குறைகளை களையக்கோரி பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இந்திய ஜனநாயக கட்சி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்திய அளவில் எதிர்கால இளைஞர்களின் வழிகாட்டியாகவும் திகழும் என்ற நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்து வருகிறது ஐ.ஜே.கே. இன்று விவசாயம் மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு தொழிலாக ஆகிவிட்டது. இந்த நிலையில் அரசியலில் மட்டும் அல்ல விவசாயத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களை ஐ.ஜே.கே. முன்வைக்கிறது. இதற்காக விவசாயிகள் அனைவரும் பெரம்பலூரில் வருகிற 26ந் தேதி அணி திரள்கிறார்கள். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
பொறியியல் கல்லூரி களுக்கு இணையாக வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட்டு கிராமங்கள்தோறும் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உறுதிபடுத்த வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கு ஆதாய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலை திட்டமாக மாற்றி அதை முழுமையாக தனியார் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் உள்பட 12 வேளாண் கொள்கைகளை வலியுறுத்துகிறது.இந்த மாநாட்டில் 10 லட்சம் பேரை திரட்டி விவசாயத்திற்கு விடிவு காலத்தை ஐ.ஜே.கே. உருவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment